
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. வெற்றியின் விளிம்பு வரை வந்த பங்களாதேஷ் 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
இந்நிலையில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் டாக்காவில் பலப்பரீட்சை நடத்தின. மழை பெய்தமையால் போட்டி தாமதமாகி ஆரம்பமானதோடு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
குசல் பெரேரா 20 ஓட்டங்ககளையும், சச்சித்திர சேனாநாயக 30 ஓட்டங்ககளையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா ஆட்டமிழக்காது 80 ஓட்டங்ககளையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் ரூபெல் ஹுசைன், சகிப் ஹல் ஹசான் மற்றும் அரபாத் சனி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
முமினுள் ஹக் 44 ஓட்டங்ககளையும், சம்சூர் ரஹ்மான் 62 ஓட்டங்ககளையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மத்தியூஸ் 3 விக்கெட்டுகளையும், சச்சித்திர சேனாநாயக இரு விக்கெட்டுகளையும் மலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட அணியின் வீரர் திசர பெரேரா போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.





