வவுனியா அட்டம்பகஸ்கட பிக்குவினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவனுக்கு நியாயம் பெற்றுகொடுக்க நடவடிக்கை!!

576

Pikkuவவுனியா, அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தில் பிக்குவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த பிக்குவுக்கு எதிரான சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் கேசரிக்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

கடந்த வருடம் வவுனியா செத்செவன சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுவன் ஒருவனை குறித்த சிறுவர் இல்லத்தில் பிக்கு ஒருவரினால் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த பிக்கு இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்தமையையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் கைது செய்து நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்காக வழக்கு விசாரணை கடந்த 11 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குறித்த விசாரணையை எடுக்க முன்னைய தினம் வட மாகாண பெண்கள் செயற்பாட்டு பரிந்துரை வலையமைப்பு தலைமையில் சிறுவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது மாத்திரமின்றி ஜனாதிபதிக்கும் மகஜரும் கையளிக்கப்பட்டது. எனினும், இதுவரை எத்தகையை தீர்வும் எட்டப்படவில்லை.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவியிடம் கேட்கப்பட்ட போது, இது தொடர்பாக எங்களுக்கு முறைப்பாடு கிடைத்தவுடனே அவருக்குரிய சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதோடு இது தொடர்பில் நாங்கள் வேறு என்ன செய்ய வேண்டும்? இப்பிரச்சினை தொடர்பில் தற்போது நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மகஜரில் தமது அதிகார சபையின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக எங்களுக்கு நீதிமன்றத்திற்கே செல்ல முடியும். அது தவிர எங்களால் எதுவும் செய்ய முடியாது.

இது நீதிமன்றதுறை சார்ந்த பிரச்சினையாகும். அதில் எங்களால் தலையிட முடியாது. இது போன்ற தவறு பல இடம்பெறுகின்றன. இதனை நீதிமன்றமே தீர்த்துள்ளது. அது போலவே இதுவும் இதனையும் நீதிமன்றம் தீர்க்கும் என்றார்.