வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய உற்சவம் தொடர்பில் வவுனியா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

1196

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர்..

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடாத்துவதற்கு பொலிசாரால் கோரப்பட்ட தடை உத்தரவு விண்ணப்பத்தை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளைய தினம் திருவிழா நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் அதனை தடுக்கும் விதமாக குற்றவியல் சட்டக்கோவையின் 106வது பிரிவின் கீழ் தடைஉத்தரவு விண்ணப்பம் ஒன்றினை வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கோரியிருந்தனர்.

இன்றைய தினம் இதனை ஆராய்ந்த நீதிபதி பொலிசாரால் கோரப்பட்ட குறித்த தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், திருவிழா நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

குறித்த வழக்கில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில்10 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளில் ஒருவரான காண்டீபன் கருத்து தெரிவித்த போது,

தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுப்பிய கடிதத்தினை சார்பாக வைத்து, விழாக்கள் இடம்பெறும் போது தொல்பொருளியல் சாதனங்களுக்கு சேதம் விளைவித்துவிடும் என்ற வகையில் குறித்த தடை உத்தரவு பொலிசாரால் கோரப்பட்டிருந்தது.

106 பிரிவின் கீழே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போது மட்டுமே பொலிசார் அதனை கையாளமுடியும். ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் இல்லாமல் அவர்கள் இந்த விடயத்தில் தான்தோன்றித்தனமாக,எதேச்சதிகாரமாக இதனை கையாண்டுள்ளனர்.

அந்தபிரிவின் ஏற்பாடுகளை நன்கு அறிந்திருந்தும் இவ்வாறானதொரு விண்ணப்பத்தை செய்து நிகழ்வை தடுப்பதற்கு பொலிசார் முனைந்துள்ளனர் எனினும் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

-தமிழ்வின்-