விடுதலைக்குப் பின் லண்டனில் மகளுடன் வாழ ஆசைப்படும் முருகன்- நளினி!!

942

Nalini-Family

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் முருகன் மற்றும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலையாகவுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையான பின்பு தங்களது மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காக முருகனும், நளினியும் லண்டன் செல்ல விரும்புவதாக அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினியை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்..

சிறையில் முருகனும், நளினியும் முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்வருக்கு தங்களது மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.

இவ்வழக்கானது சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதற்கான அறிவிப்புகள் இன்னும் 3 நாட்களில் வெளிவரும்.

ஒருவேளை மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காத பட்சத்தில் தமிழக அரசு கபினட் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசின் ஒப்புதல் இன்றி தமிழக ஆளுநர் ஒப்புதலோடு 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு லண்டனில் உள்ள தங்களது குழந்தை அரித்ராவுடன் வாழ வேண்டும் முருகனும், நளினியும் ஆசைப்படுகின்றனர். தாங்கள் விடுதலையான பின்பு அவர்கள் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்றார்.