வீதியால் செல்பவர்களை இழுத்து வைத்து எமது தமிழ், சமய பெரியார்களை நினைவுபடுத்தவில்லை : வவுனியா நகரசபைச் செயலாளர்!!

637

Vavuniya

வீதியால் செல்பவர்களை இழுத்து வைத்து எமது தமிழ், சமய பெரியார்களை நினைவுபடுத்தவில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய தேவையும் இல்லை என வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ம் திகதி வவுனியா வைத்தியசாலை முன்பாகவுள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்துள்ள இடத்தில் இடம்பெற்ற நினைவு நாள் நிகழ்வின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

1997 இல் அப்போது இருந்த நகரசபையால் நிறுவப்பட்ட இந்த தமிழ் பெரியார் சிலைகளை வவுனியா நகர வரியிறுப்பளார் சங்கம் சமூக அக்கறை உள்ளோரின் பங்களிப்புடன் புனரமைத்து இந்த நிகழ்வுகளை நடத்துவது பாராட்டப்பட வேண்டியது.

இந்த சிலைகள் யுத்தகாலப்பகுதியில் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டவை என்பது மக்களுக்கு தெரியும். அவை இந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்காவிட்டால் இந்த இடத்தில் என்ன வந்திருக்கும் என்பதும் உங்களுக்கு தெரியும். இந் நிலையில் இவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகளை பராமரித்து அவர்களை நினைவு படுத்துவது சிறப்புக்குரியது.

எமது நகரத்தில் பல சமயம், தமிழ் சார் அமைப்புக்களும் பெரியார்களும் இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறு இடம்பெறும் நிகழ்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும். இவ் விழாக்கள் செய்தமையில் தவறுகள் இருப்பின் அவர்களிடம் நேரடியாக சுட்டிக்காட்டினால் அதை கொண்டு எதிர்காலத்தில் விழாவை சிறப்பாக செய்வார்கள். அது தான் தமிழ், சமயப் பெரியார்களுக்கு அழகு.

வீதியால் செல்பவர்கள் எவைரையும் இழுத்து வைத்து எமது பெரியார்களை நினைவு படுத்தவில்லை. அப்படி செய்ய வேண்டிய தேவையும் இல்லை. சமூக அக்கறையுடன் தமிழ், சமய பற்றுள்ளவர்கள் பலர் இந் நிகழ்வுகளை அறிந்து தாமாகவே வருகின்றார்கள். இது பாராட்டப்பட வேண்டியது. இந் நிகழ்வுகளுக்கு வருவோர் தொகையும் அதிகரித்துச் செல்கிறதே தவிர குறையவில்லை எனவும் கூறினார்.