டோனியை விரைவில் பதவி விலகுமாறு வலியுறுத்தல்!!

534

Dhoniசமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி சொதப்பி வருவதால், அணித்தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டில் டுவென்டி–20 உலக கிண்ணம், 2011ம் ஆண்டில் 50 ஓவர் உலக கிண்ணம், 2013ல் சம்பியன்ஸ் கிண்ணம் உட்பட இந்திய அணிக்காக 37 கிண்ணங்களை வென்று தந்தவர் டோனி.

இருப்பினும் சமீப காலமாக வெளிநாடுகளில் சொதப்பி வருகிறார், கடந்த மூன்று ஆண்டுகளில் இவரது தலைமையில் 14 டெஸ்டில் பங்கேற்ற இந்திய அணி 10ல் தோல்வி அடைந்தது.

எதிர்அணியினர் ஓட்டங்கள் எடுப்பதை கட்டுப்படுத்த அதிரடியான மற்றும் ஆக்ரோஷமான முடிவுகளை எடுப்பதில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

வெலிங்டனில் நியூசிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டது. ஆனால் ஜாகிர் கான், முகமது ஷமி, இஷாந்த் சர்மாவுடன், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுடன் களமிறங்கினார் டோனி. பயிற்சி போட்டியில் அசத்திய ஈஷ்வர் பாண்டேக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

ஆடுகளம் வேகத்துக்கு சாதகமான நிலையில் திடீரென டோனி பந்துவீச்சை செய்தார். அடுத்த ஓவரில் ரோகித் சர்மா, கோலியை பந்துவீசச் சொல்லி தற்காப்பு பாணியில் செயல்பட்டார், இது நியூசிலாந்து வீரர்களுக்கு வசதியாக போய்விட்டது.

தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்பதால் கூட டோனிக்கு களைப்பு ஏற்பட்டிருக்கலாம். இதனால் குறைந்தபட்சம் டெஸ்ட் போட்டிக்கான அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகி விராத் கோலிக்கு வழிவிடலாம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்டின் குரோவ், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கிண்ணத் தொடரில் இந்திய அணி சம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டுமானால், டோனிக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது என்றும், எனவே பொறுப்பை கோலி வசம் ஒப்படைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டிராவிட் கூறுகையில், இக்கட்டான நேரங்களில் டோனி தற்காப்பு பாணியை கையாள்கிறார். அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளார்.

தொடர்ந்து பழைய பந்தை பயன்படுத்தி ஓட்டங்களை கட்டுப்படுத்த முயல்கிறார். இதற்கு உதாரணமாக டேர்பன் டெஸ்டை குறிப்பிடலாம். இதில் 146 ஓவர்கள் முடிந்தும் புதிய பந்தை எடுக்கவில்லை. இன்னும் ஒரு ஆண்டுகளுக்கு டெஸ்ட் அணியின் அணித்தலைவராக நீடிக்கலாம்.

அன்னிய மண்ணில் டெஸ்டில் வெல்ல கொஞ்சம் ரிஸ்க் எடுப்பது அவசியம் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சயத் கிர்மானி, அனைத்து தொடர்களையும் டோனி வென்று தருவார் என எதிர்பார்க்கக்கூடாது என்றும், வெற்றி பெற்றால் மட்டும் விமர்சிப்பதாகவும், தோற்றால் விமர்சிப்பதில்லை எனவும் ஆதரவாக பேசியுள்ளார்.