சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசன் கூறினார். இது தொடர்பாக பேரறிவாளனின் தந்தை நிருபர்களிடம் கூறியதாவது..
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் அறிவித்தது, கண்ணே இல்லாத ஒருவனுக்கு கண் பார்வை வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் மகிழ்ச்சியாக உள்ளது.
நான் ஒரு கட்டத்தில் துவண்டுவிட்டேன். எனது மகனும், நமக்கு யாரும் இல்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என கூறினான். இதனால் எனது மனைவி ஒரு போராளியாகவே மாறிவிட்டார்.
எனது மகனை தூக்கில் போட்டுவிடுவார்களோ என பயந்து கொண்டே இருந்தேன். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் எனது மகனின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தனர். அந்த செய்தியை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதன்பின் என்னை தொடர்பு கொண்ட வக்கீல்கள், நண்பர்கள் அனைவரும் பேரறிவாளன் விடுதலை ஆவதற்கு இன்னமும் 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகலாம் என கூறினார்கள்.
ஆனால் நேற்று காலை திடீரென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்பட 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார். அதை நான் டி.வி.யில் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கிய மகிழ்ச்சியை கொண்டாடி வந்த வேளையில், அடுத்த சில மணி நேரத்தில் தமிழக முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எனது மகன் பேரறிவாளன் நீண்டகாலம் தனது வாழ்நாளை சிறையிலேயே கழித்துவிட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தனது மூத்த மகள் அன்புமணி, மருமகன் ராஜா மற்றும் நண்பர்களுடன் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.





