ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!

582

கொரோனா..

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சமீபத்தில் பல குடும்ப நிகழ்வுகளில் கலந்துள்ள நிலையில், இக்குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவரும் பரிசோதனைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், அல்லது கலந்துகொண்டவர்களுடன் கடந்த வாரத்தில் நேரடியாக பழகியவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்துமாறும், பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜேர்மனிய சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடுகள் ரீதியாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இப்படியான குடும்ப நிகழ்வுகளின் அத்தியாவசியத்தினை ஆராய்ந்து முழு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.