இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மூலிகை மருந்துக்கு அங்கீகாரம்!!

701

கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட Immunity Herbal எனும் மூலிகை மருந்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

கொரோனாவை இலங்கையில் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு “Fight Against COVID 19” எனும் திட்டத்தில் புதிய கண்டுபிடிப்புக்களை வகைகளைக் கோரியிருந்தது.

இதனடிப்படையில், ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா Immunity Herbal எனும் மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தொன்றை கண்டுபிடித்திருந்தார்.

சுமார் 28 மூலிகைகளை ஒரு மாத காலமாக பரிசீலனை செய்து, அதிலிருந்து அனைத்து வயதினர் மற்றும் அனைத்து வித நோயாளர்களுக்கும் ஏற்ற வகையில் அவர்களது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலக்கூறுகள் அடங்கிய 8 வகையான மூலிகைகளிலிருந்து,

தயாரிக்கப்பட்ட மருந்து மற்றும் சூத்திரங்களை வைத்திய ஆலோசனை மற்றும் சில பயனாளர்களின் பாவனைக்குப்பின் ஏற்பட்ட மாற்றம் என்பவற்றை பரீட்சித்து தயாரித்த மருந்தொன்றை சுமார் இரு மாதங்களுக்கு முன் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்தார்.

குறித்த மருந்தை கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு வழங்கிய போது நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,

இதன் காரணமாக கொரோனா நோயினைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தனை கருத்திற் கொண்டு, இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அதற்கான சான்றிதழ் அனுப்பி வைக்கப்படுமென அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான றிப்ஹா, கடந்த 2016இல் புத்தாக்க அமைச்சினால் தேசிய ரீதியான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த மாணவியை வழி நடாத்திய ஆசிரியர் ஆர்.ஜுனைதீன், ஆலோசனை வழங்கிய அஜீமுஸான் மற்றும் அதிபர் ஸாபிர் அஹ்மத், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தைச் சேர்ந்த ஜாபிர் கரீம் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.

–தமிழ்வின்-