ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலையில் சிக்கல் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

682

highராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் (சிறையிலேயே இருக்க வேண்டும்) என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை திடீரென்று உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த அவசரகால மனுவுக்கு தமிழக அரசு, சென்னை சிறைத் துறைத் தலைவர், வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மார்ச் 6ஆம் திகதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு மனு..

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை காலையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா அடங்கிய அமர்விடம் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கேட்டுக் கொண்டார்.

அப்போது அவர் “உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவசரகதியில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும்´ என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மத்திய அரசு மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதிகள் கூறியது..

“ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படும் கைதிகளை விடுதலை செய்ய சட்டத்தின்படி வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

ஆகவே, மத்திய அரசு மனுவுக்கு தமிழக அரசு, சிறைத் துறை நிர்வாகம், கைதிகள் மூவரும் மார்ச் 6-ஆம் திகதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவால் மாநில அரசின் அதிகாரத்தை மிகக் குறைவாக நீதிமன்றம் மதிப்பிடுவதாகக் கருதக் கூடாது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி “மத்திய அரசின் மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் “மத்திய அரசு மனுவுக்கு தமிழக அரசும், தண்டனை அனுபவிக்கும் கைதிகளும் பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவைச் செயல்படுத்தக் கூடாது. இந்த மனு மீது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும்´ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது மத்திய அரசு காலதாமதமாக முடிவெடுத்ததால் மூவருக்கும் தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்தது. அதில், “ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றி மூவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம்´ என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இத் தீர்ப்பு தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாநில அமைச்சரவை புதன்கிழமை கூடி விவாதித்தது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மட்டுமின்றி ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ள நளினி, ரவி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகியோரும் நீண்ட காலமாக சிறையில் இருப்பதாகக் கூறி அவர்களையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, “சிறைக் கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். ஆகவே, மாநில அமைச்சரவை முடிவு குறித்து மூன்று நாள்களுக்குள் மத்திய உள்துறை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு பதில் அளிக்காவிட்டால், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்´ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார்.

இந்த முடிவை ஒரு பிரிவு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர். ஆனால், தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, அரசு ஆகியவை கடுமையாக எதிர்த்தன. அரசியல் காரணங்களுக்காக இது போன்ற முடிவை ஜெயலலிதா எடுப்பதாக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின.