யாழில் இன்றிலிருந்து மிக இறுக்கமாக சுகாதார நடைமுறைகள்!!

662

யாழில்..

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் யாழ். குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 115 PCR பரிசோதனைகளில் மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இவர்களை விட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் மூன்று பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் குருநாகலில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின்போது அந்த இரண்டு பெண்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதே தொழிற்சாலையை சேர்ந்த 41 வயதுடைய மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த மூவரும் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த 72 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.