இலங்கையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!!

1067

கொரோனா..

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.

ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களிடம் நடாத்திய பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது மேலும் ஐந்து பேருக்கு நோய்த்தொற்று பரவியிருந்தமை உறுதியாகியுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3483 ஆக உயர்வடைந்துள்ளது.

திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு நோய்த்தொற்று பரவியதனைத் தொடர்ந்து, அவருடைய சக பணியாளர்களும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை : பாதுகாப்பு செயலாளர்!!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 83 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இன் நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் கட்ட பரவலாகவே நாம் இதனை பார்க்கின்றோம்.

முதல் முதலில் இலங்கையில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதும், பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் அலையொன்று பரவ ஆரம்பித்த போதும் துரிதமாக நாம் செயற்பட்டோம்.

இராணுவமும் புலனாய்வுத்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து துரிதமாக செயற்பட்டு பரவலை கட்டுப்படுத்தினோம். ஏனைய நாடுகளை போல் சமூக பரவலை இலங்கையில் ஏற்படுத்த இடமளிக்கவில்லை. எதிர்பாராத விதமாக இப்போதும் மூன்றாம் அலையொன்று உருவாகியுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இராணுவமும், புலனாய்வுத்துறையும், சுகாதார அதிகாரிகளும் எவ்வாறு செயற்பட்டனரோ அதேபோல் இந்த அலையையும் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என மேலும் கூறினார்.

-தமிழ்வின்-