கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பயணித்த 35 பேர் : தென்னிலங்கையில் ஏற்படவுள்ள ஆபத்து!!

867

கொரோனா..

கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவருடன், கடவத்தையில் இருந்து காலிக்கு சென்று அதிவேக நெடுஞ்சாலை பேருந்தில் பயணித்த 35 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

குறித்த 35 பேரை நேரில் வந்து முன்னிலையாகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் ஒருவரும் வராமையினால் பாரிய சிக்கலான விடயமாகும் என சுகாதார வைத்திய அதிகாரி லசந்த உபேசேகர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி கடவத்தையில் இருந்து காலி நோக்கி பயணித்த NB – 7323 என்ற இலக்கம் கொண்ட பேருந்தில் காலிக்கு சென்றுள்ளார். அந்த பேருந்து காலை 6.30 மணியளவில் கடவத்தையில் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காலி வட்டரெக்க பிரதேசத்தை சேர்ந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக உறுதியாகியமையினால் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருடன் பேருந்தில் வந்தவர்கள் நெருங்கிய தொடர்பினை பேணியமையினால் அவர்களை முன்னிலையாகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இதுவரையில் ஒருவரும் முன்னிலையாகவில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார். பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மாத்திரமே இதுவரையில் முன்னிலையாகியுள்ளனர்.

அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய 35 பேர் இதுவரை சுகாதார பிரிவில் முன்னிலையாகாமை சமூகத்திற்குள் பாரிய சிக்கலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அல்லது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்குமாறு சுகாதார பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.