
இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக தி.மு.க வை சேர்ந்த கனிமொழி எம்.பி.,மற்றும் தி.மு.க, நிர்வாகிகள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பல்வேறு கருத்து வேறுபாடுகள், கூட்டணி தொடர்பாக பல யூகங்கள் கிளம்பி வரும் வேளையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக சில உள்நோக்கங்கள் இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.
9 ஆண்டு காலமாக காங்கிரசுடன் நட்பு வைத்திருந்த தி.மு.க. கடந்த 2013 மார்ச் 19ஆம் திகதி முன்னர் தனது ஆதரவை முழுமையாக வாபஸ் பெற்று அமைச்சரவையில் இருந்தும் விலகியது.
வரவிருக்கும் தேர்தலில் எம்.பி.,க்கள் தொகுதியை கணிசமாக பிடிக்க வேண்டும் என கருணாநிதி கூட்டணியை சேர்ப்பதில் பல வியூகங்களை வகுத்து வருகிறார். விஜயகாந்த்தை கூட்டணிக்கு வருமாறு பல முறை அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் தி.மு.க., மாநாட்டில் மத்திய அரசு இலங்கை தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதுடன், தனியாக ஒரு தீர்மானமும் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து கனிமொழி மற்றும் எம்.பி.,க்கள் நேற்று பிரதமரிடம் எடுத்து கூறியுள்ளனர். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பல்வேறு இன்னல்களை காங்கிரஸ் கொடுத்தது என்பதற்காக இலங்கை தமிழர் விவகாரத்தை காரணமாக காட்டி தி.மு.க., காங். கூட்டணியை முறித்தது.
இந்நிலையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் மீண்டும் ஒட்டு உறவுக்கு வழி ஏற்படும்.
குறிப்பாக காங்கிரசுடன் கூட்டு வைக்கவே கனிமொழி விரும்புகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோனியாவை கனிமொழி சந்தித்தார். ஆனால் கருணாநிதியோ இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். உடல் நிலை தொடர்பாக இருவரும் விசாரித்து கொண்டனர் என்றார்.
சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ராஜிவ் கொலை குற்றவாளிகள் தப்பிக்க தி.மு.க. துணைபோகிறது என்ற காரணத்தினால் காங்கிரஸ் கூட்டு என்பது சற்று கேள்விக்குறியாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமாக இருக்குமோ என்றும் இலைமறையாக பேசப்பட்டது. இதில் விஜயகாந்த் பா.ஜவுடன் கூட்டு வைக்கவும் பல பேரங்கள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
-தினமலர்-




