வவுனியாவில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதில் மக்கள் சிரமம்!!

980

மக்கள் சிரமம்..

வவுனியாவில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வைத்தியர் உரிய நேரத்திற்கு வராமையால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி 8.30 மணியில் இருந்து 30 இற்கும் மேற்பட்டோர் மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்கு அங்கு சென்ற போதும் மதியம் 11.30 வரை மருத்துவ சான்றிதழை பெறுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தியர் அங்கு சமூகமளிக்கவில்லை.

இதனால் கொவிட் – 19 அச்சுறுதலுக்கு மத்தியிலும் மருத்துவ சான்றிதழ் பெறச் சென்றோர் கூட்டமாக அங்கு நீண்ட நேரம் கூடி நின்றதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், 10.30 இற்கு பின்னர் செல்வோருக்கு மருத்துவ சான்றிதழ் பெற முடியாது எனவும் மறுநாள் வருமாறும் அங்கு கடமையில் இருக்கும் உத்தியோகத்தர்கள் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ சான்றிதழை பெறுவதற்காக உணவருந்தாது உணவுக் கட்டுப்பாடுகளுடன் இருந்து காலை சென்றும் மதியம் வரை வைத்தியர் வராமையால் பலருக்கும் உடல் சோர்வு மற்றும் உடல் நலக் குறைவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.