கொழும்பில் கொரோனா பரவும் ஆபத்து!!

640

கொரோனா..

கொழும்பு நகரில் சில இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ் வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் பெண்ணாருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீடமைப்பு தொகுதி முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் கணவருக்கு சொந்தமான சபுகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் கடமையாற்றும் 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோதமி பெண்கள் பாடசாலையில் 8 ஆம் ஆண்டில் பயிலும் மாணவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த மாணவி வெயாங்கொடை எழுவாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பதுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடுவலை பஹல போமிரிய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. இந்த பெண் மாகொல பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார். நிறுவனத்தில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றி இருக்கலாம் என சுகாதார தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த பெண் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றிஜ்வே சிறுவர் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் சிலர் கண்டறியப்பட்டனர்.

-தமிழ்வின்-