வவுனியாவில் இம்முறை 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை : புழுதி விதைப்பை தாமதித்து விதைக்குமாறும் கோரிக்கை!!

1118

நெற்செய்கை..

வவுனியா மாவட்டத்தில் இம்முறை 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காலபோக நெற்செய்கை குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாண்டுக்கான காலபோக நெற்செய்கை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்முறை 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 1000 ஏக்கருக்கு மேல் அதிகமாகும். இருப்பினும் நாம் எதிர்பார்க்கும் அளவை விட இம்முறை நெற்செய்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

குளங்கள் புனரமைக்கப்பட்டமை, கைவிடப்பட்ட விவசாய நிலங்கள் மீள புனரமைக்கப்பட்டமை மற்றும் அரசாங்கத்தின் இலவச உர விநியோகம் என்பன காரணமாக இவ் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இம் மாதம் மழை வீழ்ச்சி குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புழுதி விதைப்பில் ஈடுபடுவோர் இம்மாதம் இறுதி வரை மழையை அவதானித்து பயிர்செய்கையில் ஈடுபடுவதே சிறந்தது.

பிற்பகுதியில் மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படும் அதேவேளை, ஆரம்பத்தில் மழை வீழ்ச்சி குறைவாக காணப்படும் எனவும் தெரிவித்தார்.