வவுனியா பூந்தோட்டத்தில் வீடு முற்றாக தீக்கிரை!!(படங்கள்)

444

வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகரில் வசித்து வரும் ஆறுமுகம் நடராஜா என்பவரின் வீடு நேற்று முன்தினம்(21.02) காலை 9.30 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் சுகாதார தொழிலாளியாக பணியாற்றி வரும் நடராஜா தனது தொழிலுக்கும், அவரது மனைவி தங்களது 3 வயது மகனை பாலர் பாடசாலைக்கும் அழைத்து சென்றிருந்த வேளை, இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இத்தீயினால் பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள், ஆளடையாள அட்டைகள், திருமண பதிவு அட்டை, குடும்ப பதிவு அட்டை உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களும், ஆடைகள், தளபாடங்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு பாவனை பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவத்தை கேள்வியுற்று, நண்பகல் 12.00 மணியளவில் அவ்விடத்துக்கு சென்ற காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலர், வவுனியா கச்சேரியின் அனர்த்த முகாமைத்துவபிரிவுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மாலை 5.30 மணியளவில் அங்கு சென்ற அனர்த்த முகாமைத்துவபிரிவினர் தற்போதைக்கு தம்மால் முடிந்த உதவி இது தான் எனக்கூறி தறப்பாள் கொட்டகை ஒன்றை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

அத்தியாவசிய பொருள்களான ஆடைகள், சமையல் பாத்திரங்கள். பாய், சவர்க்காரம், நுளம்பு வலை உள்ளிட்ட சுகாதார பொருள்கள், உலர் உணவுகள் எதுவும், இதுவரை அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படவில்லை.

உரித்து காணி இன்றி உறவினர் முறையிலான ஒருவரின் வீட்டு வளவில் வசித்து வரும் ஆறுமுகம் நடராஜா, கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நிரந்தர நியமனம் இன்றி நாளொன்றுக்கு 390 ரூபா அடிப்படை சம்பளத்துடன் சுகாதார துப்பரவு பணியை மேற்கொண்டு வருகின்றார்.

மறுபடியும் தமக்கென சிறு தற்காலிக வீடு ஒன்றை அமைத்து கொள்வதற்கு கிடுகுகள், மரங்கள் , தடிகள் , சீமெந்து பைகளை பெற்றுக்கொள்வதற்கு மனிதாபிமானம் கொண்டோரின் உதவியை எதிர்பார்க்கின்றார்.

எனவே கருணை உள்ளம் கொண்டோர் அவரது கைப்பேசி இலக்கமாகிய +94 771130873 எனும் தொடர்பு எண்ணுக்கு தொடர்புகொண்டு இக் குடும்பத்தினரின் நிலைமையை உணர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

P1 P2 P3 P4