வவுனியா வடக்கு கஞ்சுராமோட்டை மக்களின் காணிகளை விடுவிக்கவும் யானை வேலி அமைக்கவும் அனுமதி : திலீபன் எம்.பி!!

714

வவுனியா வடக்கு, கஞ்சுராமோட்டைப் பகுதியில் மீள்குடியேறிய மக்களின் காணிகளை விடுவிக்கவும், யானை வேலி அமைக்கவும் வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு, கஞ்சுராமோட்டையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிப் பிரச்சனை தொடர்பிலும் வனவளத் திணைக்களத்தின் செயற்பாடு தொடர்பிலும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தமது கட்சித் தலைவரும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கா அவர்களுடன் இன்று (19.10) காலை அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பை மேற்கொண்டார்.

இதன்போதே அமைச்சர் இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு, கஞ்சுராமோட்டை மக்கள் யு த்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீள்குடியேறியுள்ளனர்.

அவர்களது குடியேற்ற காணிகளின் சில பகுதிகளை விடுவிப்பதற்கும்,மின்சாரத் துண்களை நிறுவதற்கும் வனவளத்திணைக்களம் தமது காணி என கூறி அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அந்த மக்களின் குடியேற்ற காணியை விடுவிப்பதற்கும், அவர்களது காணிகளுக்கான மின்சாரத்தை வழங்க மின்சார தூண்களை நிறுவதற்கும் அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதுடன், இது தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், அம் மக்கள் தொடர்ந்தும் யானைகளின் அ ச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அம் மக்களின் காணிகளுக்கு யானை வேலி அமைக்கவும் அமைச்சர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வவுனியா மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய நிலங்களில் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரியிருந்ததுடன், இது தொடர்பில் விரைவில் அறிக்கை பெற்று கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார் எனக் கூறியுள்ளார்.