
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக குஷால் பெரேரா 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் தனது கன்னிச் சதத்தையும் பூர்த்தி செய்தார்.
மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இந்த தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி 14 வருடங்களுக்கு பின்னர் முக்கிய வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன மற்றும் டில்ஷான் ஆகியோர் இன்றி களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக சதம் அடித்த குஷால் பெரேரா தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரராக சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.






