குதிக்கால் வலிக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும் : தி.கேதீஸ்வரன்!!

5048

குதிக்கால் வலி..

குதிக்கால் வலியானது பெரும்பாலும் குதிவாதம் எனப்படும் Plantar fasciitis இனால் ஏற்படுகின்றது. பாதத்தின் அடிப்பகுதியிலுள்ள தடித்த சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியினால் இந்நிலை உருவாகின்றது.

இதன்போது பாதத்தின் குதிப்பகுதியில் குறிப்பாக உள்பக்க குதிப்பகுதியில் ஊசியால் குத்துவதைப் போல தீவிரமான வலி ஏற்படுகின்றது. மேலும் அழற்சியின் அறிகுறிகளான சிவந்திருத்தல், வீங்கியிருத்தல், சூடாக இருத்தல் என்பவையும் உணரப்படலாம்.

ஆரம்பத்தில் குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்து முதல் சில அடிகளை வைக்கும் போது மிகத் தீவிரமாக இருக்கும்.

தொடர்ந்து நடக்கும் போது வலி தானாகவே குறைந்து விடும். ஆரம்பக் கட்டத்திலேயே பொருத்தமான சிகிச்சை எடுக்காவிட்டால் நாட்கள் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் தீவிரமாக இருக்கும்.

40 தொடக்கம் 60 வரையான வயதுள்ள நபர்களே இந்நிலையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணிகள் இவையென அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் சில காரணிகள் குதிவாதத்தை தோற்றுவிப்பதற்கான ஆபத்துக் காரணிகளாக உள்ளன.

குதிக்கால் மற்றும் அதனை சூழவுள்ள தசை மற்றும் சவ்வுப் பகுதிகளில் அதிகளவு அமுத்தத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை அல்லது பயிற்சிகளை செய்தல் அதிலொன்றாகும்.

அதாவது நீண்ட நேரம் நிற்றல், அதிக தூரம் நடத்தல், ஓடுதல், நடனம் ஆடுதல் போன்ற செயற்பாடுகளை நீண்ட காலமாக செய்வோருக்கு இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

இயற்கையான மாறுபட்ட பாத அமைப்பு மற்றும் நடத்தல் பொறிமுறை இந்நிலை ஏற்படுவதற்கான தீவிரமான ஆபத்து காரணியாகவுள்ளது. அதாவது இயற்கையாகவே சிலரது பாதங்கள் தட்டையானதாகவோ அல்லது வளைவு கூடியதாகவோ இருக்கும்.

இவ்வேளையில் சாதாரண அமைப்பிலான பாதங்களை கொண்டிருப்போரை விட இவர்களின் பாத மென்சவ்வுகளில் அதிகளவில் அழுத்தம் ஏற்படும். இது நீண்டகாலத்தில் தீவிரமாக குதிவாத நிலைமையை ஏற்படுத்தும்.

மேலும் சிலரது மாறுபட்ட நடத்தல் செயற்பாடுகளும் குதிக்கால் பகுதியில் அழுத்தத்தை அதிகரித்து தீவிரமான குதிவாதத்தை ஏற்படுத்தும்.

அதிகரித்த உடற்பருமன் பாதத்தில் அதிகரித்த அழுத்தத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்கிறது. இவ் அதிகரித்த அழுத்தம் குதிவாதத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றது. எனவே அதிகரித்த உடற்பருமனும் குதிவாதத்தை ஏற்படுத்தும் காரணியாக அமையலாம்.

ஆடை உற்பத்தி நிலைய பணியாளர்கள், ஆசிரியர்கள் போன்ற நீண்ட நேரம் நின்று பணிபுரியும் பணியாட் தொகுதியினரிடையே குறித்த நிலையானது பொதுவாக காணப்படுகின்றது. கடினமான மற்றும் உயர்ந்த குதியுடைய பாதணிகளை பயன்படுத்துவோரிலும் இந்நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் உள்ளன.

குதிவாதத்தின் ஆரம்ப கட்டத்தில் வலி மற்றும் அழற்சியை குறைப்பதற்கான மருத்துகளுடன் பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்றது. பிசியோதெரபி சிகிச்சையின் போது வலி மற்றும் அழற்ச்சியை குறைப்பதற்கான Ultrasound therapy மற்றும் Shockwave therapy என்பன பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் பாத சவ்வு மற்றும் கணுக்கால் தசை என்பவற்றிற்கு இழுவை சார்ந்த பயிற்சிகளும் மேலும் பாதத்தை சூழவுள்ள தசைகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றது.

பிசியோதெரபி சிகிச்சையின் போது குறித்த நபர் நாளாந்த பிசியோதெரபி பயிற்சிகளை செய்வதுடன் தினமும் குறைந்தது மூன்று வேளை குளிர் நீரைக் கொண்டு ஒத்தடம் செய்வதுடன் காலில் அதிகளவு பாரத்தைக் கொடுக்காதவாறு ஓய்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுவார்.

மேலும் இச் சிகிச்சையின் போது தொடர்ச்சியாக பாத சவ்வுகளில் ஏற்படும் அதீதமான அழுத்தத்தை குறைப்பதற்காக Taping மற்றும் Splinting போன்ற நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றது.

தட்டையான பாதம், வளைவு கூடிய பாதம் போன்ற இயற்கையான மாறுபட்ட பாத அமைப்பை உடையவர்கள் பிசியோதெரபி சிகிச்சையுடன் பொருத்தமான சார்புறுப்புக்களை பயன்படுத்த வேண்டும்.

இவை மாறுபட்ட பாத அமைப்பினால் உருவாகும் அதீத அழுத்தத்தை பாதங்களில் சரியான முறையில் பரவச் செய்கின்றது.

மேலும் இவ்வாறு மாறுபட்ட பாத அமைப்பை உடையோர் பரிந்துரைக்கப்பட்ட விசேட சார்புறுப்புக்களை தொடர்ச்சியாக பயன்பத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் மூலம் இவர்களில் குதிவாதம் மீண்டும் மீண்டும் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

வலி நிவாரண மருந்துகள் பயன்படாத சந்தர்ப்பங்களில் Corticosteroids மருந்துகள் ஊசி மூலமாக பாதிக்கப்பட்ட சவ்வுப்பகுதிக்கு நேரடியாக வழங்கப்படும்.

இதன் பின்னர் பிசியோதெரபி சிகிச்சை தொடர்ச்சியாக வழங்கப்படும். அது குறித்த நிலை சீராக குணமாவதையும் மீண்டும் ஏற்படாதிருப்பதையும் உறுதி செய்யும்.

அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாது வலியானது ஒரு வருடத்திற்கு மேல் தொடருமானால் அறுவைச் சிகிச்சை பரிந்துரை செய்யப்படலாம்.

இதன் போது பாதத்தின் சவ்வுப் பகுதியானது என்புடன் இணைந்த பகுதியில் வெட்டப்பட்டு அதன் மீதான அழுத்தம் குறைக்கப்படும். அல்லது கணுக்கால் தசை என்புடன் இணையும் இடத்தில் பகுதியாக வெட்டப்பட்டு பாதத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்படும்.

ஆனாலும் அறுவைச் சிகிச்சையானது தொடர்ச்சியான வலி, நரம்பு பாதிப்பு, பாதத்தின் உறுதித்தன்மை குறைவடைதல் போன்ற பாதக விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே இது கடைசி முயற்சியாக மிக அரிதாகவே பரிந்துரைக்கப்படுகின்றது.

தி.கேதீஸ்வரன்
பிசியோதெரபிஸ்ட்
மாவட்ட பொது வைத்தியசாலை
வவுனியா