வவுனியா புளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது!!

1880

புளியங்குளத்தில்..

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 3 மணிநேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று(23.10.2020) மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட மூவரும் இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், பழையவாடி, சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வெள்ளிக்கிழமையான நேற்று (24.10) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

குறித்த ஆலயத்தின் பக்தர்கள் நாகதம்பிரானிடம் அருள்வாக்குப் பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற புளியங்குளம் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தலைமையிலான பொலிசார் அங்கு வழிபாட்டில் ஈடுபட்ட மூவரை கைது செய்து கொண்டு சென்றதுடன், ஆலயத்தில் வெளியில் கழற்றப்பட்டிருந்த செருப்புக்களையும் அள்ளிச் சென்றனர்.

இது குறித்து ஆலய பக்தர்களால் ஊடகவியலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் பொலிசாருடன் கலந்துரையாடினர்.

வெளிமாவட்டத்தில் இருந்து சிலர் வருகை தந்தமையால் தாம் கைது செய்ததாக தெரிவித்தனர். ஆனாலும் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞரணித் தலைவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினருமான விக்டர்ராஜூக்கு தெரியப்படுத்தியதையடுத்து,

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஊடாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தார்.

இது குறித்து பொலிசாருடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் பொலிசார் அவர்களை எ ச்சரித்து விடுதலை செய்திருந்தனர். குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதையடுத்து கோபம் கொண்ட நாகதம்பிரான் தொடர்ந்தும் அருள் நிலையில் இருந்து அதிகாலை 12 மணிக்கே இயல்பு நிலைக்கு வந்திருந்தது.

இதேவேளை, வவுனியாவில் 50 பேருக்கு உட்பட வகையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வெளி மாவட்ட போக்குவரத்துக்களும் இடம்பெற்று பலரும் பல இடங்குளுக்கும் வந்து செல்லும் நிலையில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை தமது சமய வழிபாட்டை முடக்கும் செயல் என ஆலய பத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.