ராஜீவ் கொலை கைதிகளின் விடுதலை நடவடிக்கை : ஜெயலலிதாவிற்கு தமிழ் திரையுலகம் ஆதரவு!!

524

Cine

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை உயர் நீதிமன்று ரத்து செய்தது.

மேலும் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட மேலும் 4 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

ஆனால் மத்திய அரசின் எதிர் நடவடிக்கை காரணமாக, அவர்களுடைய விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா பேசியதாவது..

உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதலமைச்சர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்று பாரதிராஜா பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும் என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசும்போது,

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மனித நேயத்துடன் முடிவெடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

இந்த கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், தென்னிந்திய திரைப்பட சம்மேளன தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம், கவிஞர் தாமரை, பட அதிபர் சித்ரா லட்சுமணன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் பேசினார்கள். இயக்குனர் கௌதமன் நன்றி கூறினார்.