வவுனியாவில் 4 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1000ற்கு மேற்பட்டவர்கள் : 200க்கு மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

1151

கோவிட் – 19..

இவ்வருட ஆரம்பத்தில் நாடளாவீய ரீதியில் கோவிட் – 19 இன் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சுகாதார பிரிவினர் மற்றும் ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலுக்கிணங்க கோவிட் -19 தாக்கத்திலிருந்து ஆவணி மாதமளவில் நாடு மீளெழுந்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆரம்பத்தில் கம்பஹா – திவுலபிட்டி பகுதியில் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் சுகாதார பிரிவினரினால் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் அங்கு பணியாற்றும் பலருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியானது.

தொடர்ச்சியாக சுகாதார பிரிவினர் தொழிச்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்ட சமயத்தில் 200இல் ஆரம்பத்த கோவிட் -19 தொற்றாளர்கள் தற்போது உறுதிச்செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது (27.10.2020ம் திகதி நிலவரம்)

19 மரணங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளதுடன், 4043 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் 445 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக (27.10.2020 இரவு 11.23) நேரத்தின் பிரகாரம் சுகாதார பிரிவினரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

அந்த அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் பம்மைமடு பெண்கள் இராணுவ முகாம், பம்மைமடு இராணுவ முகாம், வேலங்குளம் விமானப்படை முகாம், பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரி ஆகியவை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டோர் மற்றும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கோவிட் -19 சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள சுமார் 1000 வரையிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 13 நபர்களுக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 82 நபர்கள் அவர்களது விடுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள், தொற்றாளர்கள் வந்து சென்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் என மேலும் 120 பேருக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கைகழுவும் வசதிகள் என்பவன பொலிஸாரினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்படுபவர்கள் மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை தவிர விழிப்புணர்வு ஸ்ரிக்கர், ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் வழங்குதல் என பல்வேறு செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி, மற்றும் சுய தனிமைப்படுத்தல் பகுதிகளை தொற்று நீக்கும் செயற்பாட்டிலும் சுகாதார பிரிவினர், நகரசபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.