வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராவார் என்று அதிமுக மேடைப் பேச்சாளர் பாத்திமா பாபு கூறியுள்ளார்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபு தற்போது அதிமுகவின் மேடைப் பேச்சாளராக மாறியுள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த அதிமுகவின் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விவேகானந்தர் 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் நான் இந்தியாவை வல்லரசாக மாற்றி காண்பிக்கிறேன் என்றார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று ஜெயலலிதாவை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும். அவர் பிரதமராக வந்தால், இந்தியா ஒரு சிறந்த நாடாக திகழும். அதிமுக அரசுக்கு திருப்பு முனையே நிதி நிலை அறிக்கை தான்.
கருணாநிதி தமிழகத்தை ஆண்ட போதெல்லாம் கஜானாவை காலி செய்து விடுவார். ஆனால் நமது முதல்வர் ஜெயலலிதா அந்த நெருக்கடியை போக்கி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருவார் என்பது தான் நாம் அறிந்த உண்மை.
3 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்து வரும் அவர் எந்த ஆட்சியும் செய்யாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார்.அந்த வரிசையில் அம்மா மருந்தகம் உள்ளிட்ட புதிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
மேலும் வருகிற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று இந்தியாவின் பாரத பிரதமராக ஜெயலலிதா வருவதற்கு நாம் இந்த நன்னாளில் சபதம் ஏற்று, அதற்காக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.




