வவுனியா யாசகர்கள் தொடர்பில் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

938

யாசகர்கள்..

கொவிட்-19 இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பில் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு சுகாதார பிரிவினர் முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

குறிப்பாக வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்களும் யாசகர்கள் வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு சென்று யாசகத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்களுடாக கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே யாசகர்களை வர்த்தக நிலையம் , வீட்டு வளாகத்தினுள் உள்வாக்குவதை தவிர்த்து கொள்வதுடன் தேவையேற்படின் முழுமையான பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்களுடான கலந்துரையாடல் , பணம் வழங்குதல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் மேலும் கோரியுள்ளனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்து யாசகம் செய்பவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடைமுறையினை வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.