வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : “இலங்கையின் நலனில் இருந்து தான் முடிவுகளை எடுப்போம்”!!

625

வெளிநாடுகளுடனான தொடர்பின் போது எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை எடுப்போம் என கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா, மன்னார் வீதியில் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் உடன் இணைந்து அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகை அச்சுறுத்தும் கொரோனா இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தலைமைத்துவத்திலும், பிரமதர் மஹிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டலிலும் முதல் கட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.

அவர்கள் மீது இருந்த நம்பிக்கையாலும், பாதிப்புர்க்கள் குறைவாக இருந்தமையாலும் மக்கள் கவனயீனமாக இருந்து விட்டார்கள். இனி வரும் காலத்தில் இன்னும் கூடிய நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவை நிச்சயம் நாங்கள் கட்டுப்படுத்துவோம.

அதேநேரம் பாதிப்புக்குள்ளானவர்கள் அதில் இருந்து மீண்டு எழும் வகையிலும் நாம் பல திட்டங்களை முன்வைத்துள்ளோம்.
இதன்போது, அமெரிக்கா மற்றும் சீனா நாட்டு இராஜதந்திரிகள் இங்கு வந்து சென்றுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். அதேபோல் எமது நாடும் எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை எடுப்போம்.

எங்களைப் போன்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றன. எமது மக்களினதும், நாட்டினதும் நலன்களை முன்னிறுத்தியே உதவிகளைப் பெற்றுக் கொள்வோம்.

எமது நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் அல்லாது எமது நாட்டு நலன்களை முன்னிறுத்தி தனித்துவமாவே செயற்படுவர் எனத் தெரிவித்தார்.