தனது தாயை நிர்வாணப்படுத்தி, தாக்கி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் சிறியதந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளிச்சக்குளம், உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த நுகு சப்பான் (39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக முந்தல் வைத்தியசாலை வைத்தியரினால் கடந்த 22ஆம் திகதி இரவு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது கணவன் வீட்டுக்கு பின்புறத்திலுள்ள குழி ஒன்றில் விழுந்து காயமடைந்ததாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். எனினும் முந்தல் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் இது ஒரு கொலை என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மனைவியிடம் பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கொலைச் சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தனது இரண்டாவது கணவன் எனவும், அந்நபர் மது போதையில் வீட்டிற்கு வந்து தன்னை தினமும் கொடுமைப்படுத்துவதாகவும் அந்த பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற 22ஆம் திகதி தன்னை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும், இந்தவேளை தனது முதலாவது கணவனின் மகன் வந்ததாகவும், தன்னை காப்பாற்ற முற்பட்டவேளை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவன் வைத்திருந்த பொல்லை பறித்த மகன் அவரை தாக்கியவேளை தனது இரண்டாவது கணவன் உயிரிழந்துள்ளதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி சந்தேகநபரான 16 வயதுச் சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய பொல்லும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





