என்றும் இல்லாத அளவிற்கு கடனில் மூழ்கப்போகும் பிரித்தானியா : நிபுணர்கள் எச்சரிக்கை!!

592

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், என்றும் இல்லாத அளவிற்கு பிரித்தானியா கடனில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு மேலும் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வேலை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கும் என தொழில் செய்வோர் கணித்துள்ளனர்.

அத்துடன், ஏற்கனவே வீழச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பணிக்கால விடுமுறை முடிந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பும் நேரத்தில், 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது என அவர்கள் கணித்துள்ளனர்.

வர்த்தகம் சரியாக நடக்காததாலும், பொருளாதார வீழ்ச்சியால் வரி வசூல் பாதிக்கப்படுவதாலும், அரசின் கடன் இதுவரை இல்லாத அளவில் 50,000 கோடி பவுண்டுகளை எட்டலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், பிரித்தானியாவில் இரட்டை மந்த நிலை என்னும் ஒரு வகை பொருளாதார வீழ்ச்சியை அவர்கள் கணித்துள்ளார்கள்.

இரட்டை மந்த நிலை என்பது என்னவென்றால், ஒரு முறை வீழ்ச்சி அடைந்த பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைமைக்கு வரத்துவங்கும்போது, அது மேலும் உயராமல் மீண்டும் வீழ்ச்சியை நோக்கி செல்வதாகும்.

பிரித்தானியாவில் அதுதான் நிகழப்போவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பிரித்தானியாவில் பொருளாதாரம், ஆண்டின் முதல் காலாண்டில் 2.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.

இரண்டாவது காலாண்டில் 19.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. மூன்றாவது காலாண்டில், கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டு, தொழில்கள் மீண்டும் துவக்கப்பட்டதும் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது,

அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில். அதனால், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பிரித்தானியா விடுபட்டுவிடும் என்ற ஒரு நம்பிக்கை உருவானது.

ஆனால், இப்போது மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஆண்டின் நான்காவதும் கடைசியுமான காலாண்டில் மீண்டும் பிரித்தானியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.