இலங்கையில் வீசும் ஆரோக்கியமற்ற காற்று : ஆபத்து யாருக்கு?

671

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற சில தெற்காசிய நாடுகளின் மாசுபட்ட வளி இலங்கையின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் வளியின் தரம் மாசுபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி H.D.S. பிரேமசிறி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது பருவமழைக்கு இடைப்பட்ட மழை பெய்து வருவதால் மாசுபட்ட வளி எல்லா திசைகளில் இருந்தும் இலங்கைக்குள் வருவதாக பிரேமசிறி கூறியுள்ளார்.

இந்த ஆரோக்கியமற்ற காற்று ஒக்டோபர் 27 முதல் கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களை பாதித்துள்ளது. இந்தநிலையில் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறியீட்டு மதிப்பு 90 முதல் 150 வரை உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்குள் வளி மாசுபாடு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது சுவாசக் கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் பிரேமசிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலேசான தூசித் துகள்களுக்கு உணர்திறன் கொண்டவர்கள் இந்த சூழ்நிலையை கவனத்தில் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உணர்திறன் உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனவே அவர்கள் ஆபத்து கொண்டவர்களாக உள்ளனர்.

எனவே இதுபோன்ற உடல் பிரச்சனைகளை கொண்டவர்கள் தவறாமல் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். உடல்நலக் கேடுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உடல் உழைப்பு, விளையாட்டு மற்றும் வெளியில் வேலை செய்வது போன்ற கடுமையான செயல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரேமசிறி கேட்டுக்கொண்டார்.