சுகாதார சட்டத்தை மீறிய கொழும்பு மணமகன் : பலருக்கு கொரோனா தொற்று!!

662

கொரோனா தொற்று..

மாவனெல்ல பிரதேசத்தில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதியும் தொற்றுக்குள்ளானவர்களில் அடங்குவதாக மாவனெல்ல பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மணமகள் தரப்பினரால் நடத்தப்பட்ட திருமண நிகழ்வின் போது சுகாதார முறைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாள் மணமகன் தரப்பினரால் மாவனெல்ல ஓவத்தை பிரதேசத்தில் நடத்திய நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றவில்லை என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி எனவும் குறித்த தினத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் இருந்து பாரிய அளவிலானோர் வருகைத்தந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 120க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான மணமகன் உந்துகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணமகள் கேகாலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கேகாலை மாவட்ட கொரோனா தொற்றாளர்கள் 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 3031 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.