விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்கச் சென்ற மனைவிக்கு நடந்த விபரீதம்!!

595

மிஸ்ஜா..

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்கச் சென்ற மனைவி பேருந்து மோதி உயிரிழந்த சோகச் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை ஐசிஎப்-ல் இருந்து அயனாவரம் செல்லும் சாலையில், கீழ்ப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது மாநகரப் பேருந்து பின்னால் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கையிலுள்ள ஆவணங்களை சோதனை செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மிஸ்ஜா (26) என்பது தெரிய வந்துள்ளது. வள்ளலார் நகர் முதல் புதூர் வரை வழித்தடத்தில் செல்லும் மாநகரப் பேருந்து மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் தனது கணவரைப் பார்க்கச் செல்லும்போது விபத்துக்குள்ளாகி மிஸ்ஜா பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகர பேருந்தையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாகூர் நகர் பகுதியில் 3000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இப்பகுதியில் வருடா வருடம் திருப்பத்தில் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும், பலருக்கு படுகாயம் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வேகத்தடை அமைக்கக்கோரி பலமுறை வலியுறுத்தியும் போக்குவரத்து போலீசார் போடாததால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தாங்களே அந்த வேகத்தடையும் அமைத்துக்கொள்ளவும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களைக் கலைத்துள்ளனர்.