வவுனியா நகரசபை அமர்வில் பெண் அலுவலரின் இடமாற்றத்தால் சர்ச்சை!!

1531


நகரசபை அமர்வில்..



வவுனியா நகரசபை அமர்விற்கு நகரசபை உத்தியோகத்தர்கள் சென்றமையால் சபையில் அமளி துவளி ஏற்பட்டது.



வவுனியா நகரசபையின் அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (19.11) நடைபெற்றது. இதன்போது 2021 ஆம் ஆண்டு பாதீடு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபையின் வழமையான அமர்வு நடைபெற்றது.




இதன்போது சபை உறுப்பினர் ந.சேனாதிராஜா நகரசபையில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகத்தர் தான் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாகவும், சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பான விளக்கத்தை வழங்குமாறும் கோரியிருந்தார்.


இதன்போது விளக்கமளித்த நகரசபை செயலாளர் இ.தயாபரன், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், தாம் தமது அதிகாரத்திற்குட்டபட்ட வகையில் சரியான முறையில் நடந்து கொண்டதாகவும், குறித்த உத்தியோகத்தர் தமது கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாகவும்,  திட்டமிட்டு தம் மீது தற்போது சேறு பூச முற்பட்டுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த உத்தியோகத்தரின் செயற்பாடுகள் தொடர்பில் விபரித்ததுடன், தாம் தமது அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், சட்ட திட்டங்களுக்கு அமைவாகவுமே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் தனது கருத்தை வலுப்படுத்த அரச உத்தியோகத்தர்களை சபையின் முழுமையான அனுமதி பெறாது அழைத்து வந்ததுடன், இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோருக்கு சார்பாக செயற்பட்டால் தானும் குறித்த உத்தியோகத்தர்களும் இடமாற்றம் பெற்றுச் செல்வோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், சபைக்கு வந்த உத்தியோகத்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோகத்தருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது நகரசபை உறுப்பினர் பி.யானுஜன் குறித்த விடயம் தொடர்பில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோகத்தர் தெரிவித்துள்ளதாகவும், தான் இங்கு கடமையாற்றும் உத்தியோகத்தரான பெண் ஒருவரால் தா க்கப்பட்டதாகவும் எமக்கு தெரிவித்துள்ளார். இதனால் இதன் உண்மை தன்மையை அறிந்து சபையின் மான்பை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த உத்தியோகத்தர் பிழையான வகையில் செயற்பட்டுள்ளார். அவரது இடமாற்றம் அரச இயந்திரத்துடன் தொடர்புடையது. அது வழமையான செயற்பாடு. நாம் அதனை பற்றி பேச முடியாது.

பொதுச் சேவை ஆணைக்குழுவே இடமாற்றம் குறித்து தீர்மானம் எடுக்கின்றது. எனவே சபை செயலாளரின் செயற்பாடுகள் சரியானது என நகரசபை உறுப்பினா சு.காண்டீபன் தெரிவித்தார்.

இதன்போது சபையில் அரச உத்தியோகத்தர்களை அழைத்தமை தவறு என பல உறுப்பினர்கள் சுட்டிகாட்டியதுடன், இது ஒரு தவறான நடவடிக்கை என வலியுறுத்தினர்.

இதனையடுத்து அரச உத்தியோகத்தர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் நிர்வாக விடயங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் தெரிவித்ததையடுத்து குறித்த விடயம் முடிவுக்கு வந்து சபை அமைதியானது.