இந்தோனேசியாவில் 1500 தீவுகள் அழியும் அபாயம்!!

347

Indonesia

உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தோனேசியாவில் உள்ள சுமார் 1500க்கும் அதிகமான தீவுகள் 2050ம் ஆண்டில் இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமியின் வெப்ப நிலை உயர்வு காரணமாக துருவ பகுதிகளில் உள்ள பனிப்படலங்கள் உருகத் தொடங்கியுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இதன் விளைவாக கடல் மட்டம் உயர்வது, பருவநிலை மாறுபாடு, பருவமழை பொய்த்து போதல், கோடை காலங்களில் கடும் மழை பெய்தல் போன்ற பல்வேறு மாற்றங்களும் காணப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.

இந்தோனேசியா நாடு முழுவதும் தீவுகளால் ஆன தேசமாகும். இங்கு சுமார் 17 ஆயிரம் தீவுகள் காணப்படுகின்றன. இதில் சுமார் 6 ஆயிரம் தீவுகள் வசிக்க தகுதியற்றவை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதுகுறித்து ஆசிய சுற்றுசூழல் ஆய்வாளர் அஞ்சா சீனிவாசன் கூறுகையில், இந்தோனேசியாவில் ஜகார்தா உள்பட 40 சதவீத நிலப்பரப்பு கடல் மட்டத்திற்கும் தாழ்வாகவே அமைந்துள்ளன. தற்போது இதுதான் இந்தோனேசியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள உலக வெப்பமயமாதல் என்கிற பருவநிலை வெப்ப மாறுபாடு காரணமாக கடல் மட்டம் அதிகரித்து வருவதால் ஏற்கனவே இங்கு பல மாவட்டங்கள் நீர் சூழ்ந்த ஏரிகளாக மாறிவிட்டன. இங்கு சுமார் 40 மில்லியன் மக்கள் கடலுக்கு மிக அருகில் 3 கிமீக்கும் குறைவான தூரத்திலேயே வசித்து வருகின்றனர்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல்மட்டம் 90 செமீ வரை உயர வாய்ப்புள்ளது. அப்போது 2030ல் ஜகார்தா விமான நிலையத்தை கூட கடல் நீர் சூழ்ந்துவிடும். சுமார் 1500 தீவுகள் கடலுக்குள் மறைந்துவிடும் அபாயம் உள்ளது என்றார்.