புற்றுநோயை எளிதில் கண்டறியும் மருத்துவ காகிதம்!!

297

Canserபெண் ஆய்வாளர் ஒருவர், சிறுநீர் மூலம் புற்றுநோயை மிக எளிதாக கண்டறியும் நவீன மருத்துவ காகிதத்தை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (எம்ஐடி) பேராசிரியராக பணியாற்றி வருபவர் சங்கீதா பாஹ்டியா (46). இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோயை கண்டறியும் நவீன மருத்துவ காகிதத்தை உருவாக்கி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, புற்றுநோய் கட்டிகளில் இருந்து வெளியாகும் மிகச்சிறிய நுண்துகள்கள், புரோட்டியாஸ் என்று அழைக்கப்படுகிறது. புற்றுநோய் தாக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் இது வெளியேறும்.

இதன் தடயத்தை கண்டறிவதன் மூலம் எளிதில் புற்றுநோய் தாக்கத்தை அறிய முடியும் என்று கண்டறிந்தேன்.

இதன் அடிப்படையில், சிறுநீரில் புரோட்டியாஸ் இருப்பதை உறுதி செய்ய நவீன மருத்துவ காகிதம் கண்டுபிடித்தேன். புற்றுநோய் தாக்கப்பட்டவர்கள் என்று கருதப்படும் நோயாளியின் சிறுநீரில் இருந்து ஒரு சில துளி சிறுநீரை இந்த காகிதத்தில் ஊற்றினால், அது புரோட்டியாஸ் இருந்தால் காட்டிக் கொடுக்கும்.

இதன் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்து கொண்டு உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்க முடியும். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதை சரி செய்ய முடியும்.

இந்த நவீன மருத்துவ காகிதம் அதற்கு உதவி செய்யும்.பெண்களின் கர்ப்பத்தை அறிய பயன்படும் நவீன மருத்துவ அட்டைகளை போலவே இந்த, புற்றுநோய் காகிதமும் செயல்படுகிறது. இதன் மூலம் வளரும் நாடுகளில், கிராமங்களில் புற்றுநோய் தாக்கியவர்களாக கருதப்படுபவர்களின் இரத்தத்தை ஆய்வு செய்ய எடுத்துக் கொள்ளப்படும் நேர விரயம் மற்றும் பெரும் பொருட் செலவிலான சோதனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

சாதாரணமாக செவிலியர்களே புற்றுநோயை இதன் மூலம் கண்டறிந்து விட முடியும். இவ்வாறு சங்கீதா பாஹ்டியா கூறினார்.