சொந்த மண்ணில் இந்தியாவிடம் கிண்ணத்தை இழந்த இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா!!

837

india

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது.

பேர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் கடைசி அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகளிகள் பலப்பரீட்சை நடத்தின.

மழை காரணமாக தாமதமாக ஆரம்பமாகிய இப்போட்டி 20-20 போட்டியாக நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பினைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இநதியாவின் ஆரம்ப வீரர்களாக தவான் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி 19 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து தவானுடன் இணைந்து கொண்டார் கோலி. இவர்கள் இருவரும் இணைந்து விரைவாக ஓட்டங்களைக் குவித்து 50 ஓட்டங்களை இந்தியா பெற்றபோது தவான் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்கள், ரெய்னா 1 ஓட்டம் மற்றும் தோணி 0 என அடுத்தடுத்த விரைவாக ஆட்டமிழக்க இந்தியா தடுமாறியது. பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த கோலியும் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி நேரத்தில் 7ஆவதாக களமிறங்கிய ஜடேஜா 25 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்று இந்திய அணியை ஒரு வலுவான இலக்கினை நோக்கி கொண்டு சென்றார்.

இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் போபரா 3 விக்கெட்டுக்களையும் அண்டர்சென், ட்ரெட்வெல் மற்றும் ப்ரோட் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

தொடர்ந்து 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. 2 ஓட்டங்களுடன் அணித் தலைவர் குக் வெளியேறினார். பின்னர் ட்ரொட் 20 ஒட்டங்களுடனும், ரூட் 7 ஒட்டங்களுடனும், பெல் 13 ஒட்டங்களுடனும் சிறிய இடைவெளியில் வெளியேற இங்கிலாந்து ஆட்டம் கண்டது.

இந்நிலையில் ஜோடி சேர்ந்த மோர்கன் மற்றும் போபரா இங்கிலாந்து நம்பிக்கை ஊட்டினர். ஒரு கட்டத்தில் 2.3 ஓவர்களுக்கு 20 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கினை இங்கிலாந்து அடைந்த நிலையில் இசாந்த் சர்மா அடுத்தடுத்த பந்தில் மோர்கன் மற்றும் போபரா ஆகியோரை வெளியேற்ற போட்டி இந்தியா வசமாக மாற ஆரம்பித்தது.

இதனையடுத்து ஜடேஜாவின் 19ஆவது ஓவர் போட்டியை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றது. இதில் பட்லர் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இநதியா 5 ஓட்டங்களினால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் சம்பியனாகியது. இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் ஏமாற்றமடைந்தது. பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் 6ஆவதும் இறுதியுமான அத்தியாயத்தில் இந்தியா சம்பியனான போது ஐ.சி.சியின் அனைத்து தொடர்களையும் கைப்பற்றிய தலைவராக தோணி மாறினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா தெரிவானார். இந்த தொடரின் நாயகனாக அதீர திறமையை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தெரிவு செய்யப்பட்டார்.