
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் தவான் 94 ஓட்டங்களையும் கோலி 48 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை சார்பில் பந்துவீச்சில் மெண்டிஸ் 04 விக்கெட்களையும் சேனாநாயக்க 03 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 84 பந்துகளை எதிர்கொண்டு 103 ஓட்டங்களையும் பெரேரா 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக குமார் சங்ககார தெரிவுசெய்யப்பட்டார்.





