விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை : சிறப்பு குழு நியமனம்!!

747

விமான நிலையம்..

சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்களை திறப்பதற்கான ஆரம்ப திட்டங்களை வகுக்க சுகாதார அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்க, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான சுகாதார வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதில் கூட்டுக் குழுவுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

இந்த குழு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப சுற்றுலா துறையை முன்னேற்ற கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல மாதங்கள் கழித்து சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய கடந்த 3ம் திகதி சிறப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியராச்சி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இலங்கைக்கு வரும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக மார்ச் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.