வவுனியா செட்டிக்குளத்தில் 24 வருடமாக பேரூந்துக்காக வெயிலில் காத்திருக்கும் மக்கள் : தீர்வு கிடைக்குமா?

1141

செட்டிக்குளத்தில்…

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட செட்டிக்குளம் நகரப் பகுதியில் நிரந்தர பேரூந்து தரிப்பிடம் இன்மையினால் மக்கள் பேரூந்திற்காக கடந்த 24 வருட காலமாக வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் செட்டிக்குளம் நகரில் நிரந்தர பேரூந்து தரிப்பிடம் இல்லாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் 1996ம் ஆண்டளவில் மீள்குடியேறியதுடன் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அடைக்களம் வழங்கிய இடமாக வவுனியா செட்டிக்குளம் பிரதேசம் காணப்படுகின்றது.

யுத்தத்தினால் பாதிப்படைந்த பல மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் செட்டிக்குளம் பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் நிரந்தர பேரூந்து தரிப்பிடம் அமைக்கப்படாமையினால் மக்கள் பேரூந்திற்காக வெயில் , மழைகளில் காத்திருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா, மாங்குளம், மெனிங்பாம் போன்ற பல பகுதிகளுக்கு பேரூந்து சேவை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஆ.அந்தோனியை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

செட்டிக்குளம் பகுதியில் நிரந்தர பேரூந்து நிலையம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை தான் பதவியிலிருந்த காலத்தில் முன்னெடுத்திருந்தாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை செயலாளர் பு.செந்தில்நாதனை தொலைபேசி தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில், இவ்விடயம் தொடர்பில் தான் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.