வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீடுகள் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

2084

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியாவில் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 நபர்களுக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாய்க்கும் பிள்ளைக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது தாய்க்கும் பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அக் கிராம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு பலரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்றையதினம் (14.12.2020) காலை வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் வவுனியாவில் நேற்று மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்,

கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி , கந்தக்காடு இரானுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத பெண் என்ற மூவரே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை, திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கை என்பன நேற்றிரவு (14.12) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் (15.12.2020) திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் , கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி ஆகியோரின் வீடுகள் வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.