இந்தியாவில்..
இந்தியாவில் இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞனை பஜ்ரங் தள அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதிமன்றம் பொலிசாரை கண்டித்துள்ளது.
உத்திரப்பிரேதச மாநிலம் முரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி (22). இவரும் ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக கடந்த 6-ஆம் திகதி பதிவு திருமண அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென்று, பஜ்ரங் தள் அமைப்பினர் அப்பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், அவர்களது திருமணம் லவ் ஜிகாத் என்று புகார் அளித்தனர்.
இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், பிங்கியை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் மற்றும் மைத்துனரை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக சமீபத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, முரதாபாத் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் பிங்கி, தான் விருப்பப்பட்டு ரஷீத்தை திருமணம் செய்ததாகவும், மேஜர் என்றும் கூற, இதனை கேட்ட நீதிமன்றம் அவரை கணவர் வீட்டிற்கு செல்ல அனுமதித்தது. பொலிசாரின் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.