உழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம் அவர்கள்!!(ஓர் அஞ்சலி குறிப்பு)

687

ஈழத்திருநாட்டின் சிரசாகத் திகழும் புகழ்மிகு யாழ் நகர் தன்னில் கண்போல் அமைந்து, அழகு தரும் தென்னந்தோப்பும், வயல்களும் தோட்டங்களும் மற்றும் அனைத்து வளங்களும் கொண்ட மாதகல் பதிதன்னில் இல்லறத்தின் இலக்கணமாய் நல்லறம் நடத்திய சங்கரப்பிள்ளை – சிவபாதம் தம்பதியினருக்கு மூத்த புதல்வியாக அமரர் மங்கையர்க்கரசி அவர்களுக்குப் பின்னர் இரண்டாவது அருந்தவப் புதல்வியாக மகேஸ்வரி அவர்கள் 14.04.1933 ஆம் திகதி பிறந்தார். அவர் தனது கல்வியை மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கற்றார்.

புன்சிரிப்புடன் கூடிய இனிய சுபாவமும், இறையன்பும், இனசனத்தார் உறவு பேணும் பண்பும் சிறுவயது முதலே அவரிடம் குடிகொண்டிருந்தன. பெற்றோர் இவரை, அராலியில் வாழ்ந்த தம்பாப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியரின் புதல்வரான சிவசிதம்பரம் அவர்களுக்கு 1952 ஆம் ஆண்டு கரம் பிடித்துக் கொடுத்தனர்.

அன்பும் அறனும் உடைய இல்வாழ்வைச் சிறப்புடன் நடாத்திய இக்குடும்பம் வவுனியா இறம்பைக்குளத்தில் குடியேறி பின்னர் வெளிக்குளத்தில் வசித்து வந்தது. சிவசிதம்பரம் -மகேஸ்வரி தம்பதியினர் பெற்றோரைப் போற்றி வாழும் நற்குணங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்தவர்களாக பெண்பிள்ளைகள் எண்மரை ஈன்று சிறப்புப் பெற்றனர்.

வவுனியா சமளங்குளம் கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு அரசினால் வழங்கப்பட்ட காணியில் குடியேறி நீர்ப்பாசன நெற்காணியைப் பயிரிட்டு, பசுக்களை வளர்த்து பராமரித்து வந்த இக் குடும்பம் ஊரிற் சிறந்த விவசாய குடும்பமாக மிளிர்ந்தது. மகேஸ்வரி அவர்கள் போற்றி வளர்த்த பசுக்கள் மேய்ச்சல் நிலம்தேடி அயற் கிராமங்களுக்குச் செல்லும்போது, சகமொழி பேசும் அப்பகுதி மக்கள்; ‘பெரிய பட்டி அம்மாவின் பசுக்கள்’ எனக்கூறி, அவர்களே நேரில் வந்து அவருக்கு விபரம் தெரிவிப்பார்கள். அந்த அளவுக்குப் பசுக்களால் அவர் மேன்மை அடைந்திருந்தார்.

மகேஸ்வரி அன்னையவர்கள் இளவயதிலேயே – 1969 ஆம் ஆண்டு கணவரை இழந்து விதவையான பின் மனம் தளரவில்லை. விவசாயத்தில் சொந்த உழைப்பை மட்டும் நம்பி குடும்பச் சுமையை இன்முகத்துடன் ஏற்று வாழ்ந்து வந்தார். வாகன வசதிகள் இல்லாத அக்காலத்தில் தொலை தூரம் நடந்து சென்று குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி தலையில் சுமந்து வந்து பிள்ளைகளை வளர்த்தார்.

ஓர் இல்லத்தரசியாக, அன்னையாக, மாமியாக, தங்கையாக, மைத்துனியாக, பாட்டியாக, சிறந்த அயலவராக பல்வேறு உறவுமுறைகளைக் கொண்டிருந்த அன்னையவர்கள் தூய வெள்ளை ஆடையும் சிரிப்பு மாறாத முகமும், திருநீறு நிறைந்த நெற்றியும் தாய்மையை வெளிப்படுத்துகின்ற அன்புடன் காண்போரை நலம் விசாரிக்கும் பாங்கும் கொண்டவராக விளங்கினார். இவரை உறவாலும் நட்பாலும் தெரியாதவர்கள் இல்லையென்றே கூறலாம்.

தனது 36 ஆம் வயதில் வெள்ளை சாறி உடுத்து அம்மனின் திருவுருவாகத் திகழ்ந்த அவர். தன்னைப்போல் தன் பிள்ளைகள் இளமையில் வறுமைப்படவும் பொறுப்புக்களுக்கு அஞ்சி ஒடுங்கவும் கூடாதென அவர்களைப் புடம்போட்டு வளர்த்தார். அவர் வாழ்ந்த சமளங்குளம் கிராமத்தினதும் அதனைச் சூழ்ந்த பிரதேசத்தினதும் முதலாவது பட்டதாரியாகத் தனது ஒரு மகளை உருவாக்கி சாதனை படைத்தார்.

ஆசிரிய சேவையில் புகுந்த அந்தப் புதல்வி நாகேஸ்வரி, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்று நடத்தியும், பின்னர் வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியும் வவுனியா பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் சேவையாற்றியதன் மூலம், ஈன்ற பொழுதிலும் பெரிதும் உவந்து பெருமை பெற்ற உத்தம அன்னையானார். அவரது மற்றுமொரு புதல்வி சர்வேஸ்வரி உளவியல்துறை ஆசிரியராகப் பணியாற்றி அக்குடும்பத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தன் மக்களுக்குக் கல்வியூட்டி அவையவத்து முன்நிற்கச் செய்து சான்றோர்களாக்கி, சமுதாயத்தில் பவனிவரச் செய்த அந்தத் தாயின் திறமையால் அவரது வழிவந்த பேரப் பிள்ளைகளும் சிறப்பான கல்வி பயின்று மருத்துவம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். அந்த வகையில் சமூகத்தில் சிறப்பாகச் செழித்துள்ள ஆலமரம் போன்ற அக் குடும்பத்தலைவியாகிய அந்த அன்னையின் கடின உழைப்பு, கடமையுணர்வு என்பன பலருக்கும் முன்மாதிரியானவை. போற்றுதலுக்குரியவை.

ஆரம்பக் கல்வியை மட்டுமே கற்றிருந்தாலும் இதிகாசப் புராணங்களையும் பஞ்சதந்திரக் கதைகளையும் ஆர்வமுடன் கற்றுத் தேறியிருந்த அவர் தேவையான சந்தர்ப்பங்களில் உபகதைகளின் மூலம் நல்லறிவைத் தன் பிள்ளைகளுக்குப் போதித்தார். தோத்திரப்பாடல்களை வரிசைக்கிரமமாக பாடும் ஆற்றல் கொண்டிருந்த அவர் தனது குலதெய்வமாகிய நுணசை முருகனையும், வீரபத்திரரையும் அனுதினமும் பாடிப் பரவி ஆண்டுதோறும் தன்னால் முடிந்த காணிக்கையை செலுத்தி வந்தார்.

கந்தசஸ்டி கவசம் அவரிடம் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவசமிருக்கும். இடர் வருங்கால் அவர் ஓதுவது கந்தசஸ்டி கவசமும் சிவகாமி பத்தையும்தான்.

தான் வாழ்ந்த சமளங்குளம் கிராமத்தில் கல்லுமலைப் பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கு ஊர் முக்கியஸ்தர்களுடன் இணைந்து அத்திவாரமிட்டதுடன், ஆலய வளர்ச்சிக்கும் ஆன்மீக வளர்ச்சிக்குமாக அரும் பாடுபட்டார். வெள்ளிதோறும் கல்லுமலைப் பிள்ளையாரையும் தன் வீட்டருகில் உள்ள முத்துமாரி அம்மனையும் தரிசிக்கத் தவறுவதில்லை.

பலரும் இவரைப் பின்பற்றி வாழத்தக்க வகையில் சமூகப்பற்றும், பிறருக்கு உதவும் பாங்கும், ஆன்மீகத்தில் மிகுந்த விருப்பும் கொண்டவராகத் திகழ்ந்தார். ‘வலது கை கொடுப்பதை இடது கை அறியாத’ வகையில் இவர் பலருக்கு ஆற்றிய உதவிகளை இவர் இருந்தபோதும், மறைந்த போதும் உணராதவர்களே இல்லை எனலாம்.

அன்பையும் அரவணைப்பையும் கண்டு பூரிப்புடன் வாழ்ந்த எமது அன்னை முதுமை காரணமாகத் தளர்ந்தார். இறை நம்பிக்கையில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்ததால், இவரை எதுவித நோயும் தீண்டவில்லை. இறை சிந்தனை நீங்காதவராக தனது 89 ஆவது வயதில் 14.11.2020 சனிக்கிழமையன்று பூதவுடலை நீத்து புகழுடம்பைப் பெற்று இறைபதம் எய்தினார்.

உத்தம தாயாக வாழ்ந்த எமது அன்னை மகேஸ்வரி அவர்கள் ஆத்மா சாந்திபெற்று அன்னாரின் குலதெய்வத்தின் பாதத்தில் ‘இறவாமையும் இனிப்பிறவாமையும் கொண்ட வரமெனும் முக்தியாகிய பூரண நித்திய ஆனந்தத்தில்’ திகழ எல்லாம் வல்ல இறைவனின் பாத கமலங்களை வேண்டி நிற்போமாக.

– சமளங்குளம் கிராம மக்கள் சார்பாக சத்தியபாமா லெட்சுமணன் –