வவுனியா புதிய சாளம்பைக்குளம் கிராமம் சுகாதாரப் பிரிவினரால் விடுவிப்பு!!

1189

புதிய சாளம்பைக்குளம்..

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புதிய சாளம்பைக்குளம் கிராமம் கடந்த (12.12.2020) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் கடந்த (14.12.2020) அன்று வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த 28 வயது தாயும் அவரது 5 வயது மகளும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் பின்னர் அடையாளம் காணப்பட்ட 38 வயது தந்தை, 8 வயது மகன், 2 வயது சிறுமி ஆகியோரும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

புதிய சாளம்பைக்குளம் முடக்கப்பட்டு இது வரையிலும் சமூகப்பரவல் எவையும் இன்மையினால் புதிய சாளம்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 46 நபர்களை தவிர மிகுதி அனைவரையும் தனிமைப்படுத்தலிருந்து இன்று சுகாதார பிரிவினர் விடுவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் நான்கு பாடசாலைகள் காலவறையின்றி மூடப்பட்டதுடன், வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கை என்பன சுகாதாரப் பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.