அறிவு,முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் விடுதலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!!

561

Muruganமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட மூன்று பேரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருணை மனு கால தாமதமாக நிராகரிக்கப்பட்டதை காரணமாக கொண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து அவர்களையும், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் முடிவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 3 பேரின் விடுதலையை எதிர்த்து 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது பலியானவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளிகள் வழக்கு தொடர முடியாது என்றும், கருணை மனு நிராகரிப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் 6ஆம் திகதி மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.