ஒமேகா லைன் ஆடைத்தொழிற்சாலை..
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒமேகா லைன் ஆடைத்தொழிற்சாலையினால் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு ரூபா மூன்று மில்லியன் நிதியுதவியினை வழங்கி வைத்தமையுடன் பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று(23.12.2020) காலை இடம்பெற்றது.
சுமார் 2600 ஊழியர்களை தன்னகத்தே கொண்ட வவுனியா மாவட்டத்தில் முன்னணி ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றான ஒமேகா லைன்- வவுனியா நிறுவனமானது சமூக நலனைக் கருத்திற் கொண்டு கடந்த வருடங்களாகவே அதிகளவான சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அவ்வகையில் இவ்வருடம் முழு உலகமும் கோவிட்-19 நோய் தாக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் இந் நிலையில் இலங்கையும் இந்நோயினைக் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இச் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்யும் முகமாக இவ் ஆடைத்தொழிற்சாலையினால் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 12000 முகக்கவசங்கள், பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு 2000 பாதுகாப்பு உடைகளையும் இலவசமாக வழங்கி வைத்தனர்.
மேலும் தற்பொழுது நாட்டில் நிலவுகின்ற அதி தீவிர பரவலுக்கு எதிராக கைகொடுக்கும் வகையில் ரூபா மூன்று மில்லியன் நிதியுதவியும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு வழங்கியுள்ளது.
இந் நிதியுதவியானது வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் மகேந்திரன் மற்றும் தொற்று நோயியல் நிபுணர் லவன் ஆகியோரிடம் ஆடைத் தொழிற்சாலையின் மனிதவளம் மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் சமன் ஜெயசிங்கவினால் இன்று கையளிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் ஆடைத்தொழிற்சாலையின் மனிதவள நிர்வாகி அன்ரன் மதன்ராஜ், நிதி மற்றும் கணக்கீட்டு உதவி முகாமையாளர் பிரவீன்குமார் மற்றும் ஆடைத்தொழிற்சாலையின் முதன்மை ஊழியர்களான பிரதீபா மற்றும் ஜஸ்மினா ஆகியோருடன் அந் நிறுவனத்தின் ஏனையய சில ஊழியர்களும் கலந்துகொண்டனர்.