வவுனியா வைத்தியசாலைக்கு வைத்தியர் தேவையை நிவர்த்தி செய்ய ஒரு வாரகாலம் அவகாசம்!!

1482

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உணர்வழியியல் வைத்திய நிபுணர் வெற்றிடத்தினை ஒர் வார காலத்தினுள் நிவர்த்தி செய்யவிடின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடருமென வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் எம்.எம்.எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருந்து. அவரது அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர்கள் இன்று புதன்கிழமை (23.12.2020) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளையினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது. ஆயினும் தற்போது வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக முறையற்ற காலநிலையால் மழை பெய்வதுடன் வெள்ள அனர்த்தத்திற்கு மக்கள் முகம் கொடுப்பதனாலும் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பு அடுத்த வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்தும்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்தும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு உணர்வழியியல் வைத்திய நிபுணர் விடுவிக்கப்பட வேண்டும்.

இவருக்கான பதிலீட்டு வைத்திய நிபுணர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்ப சுகாதார அமைச்சு முயற்சிகள் எடுப்பதாக எமக்கு உறுதி கூறியுள்ளது.

மேலும் சம்மாந்துறை வைத்தியசாலையில் இருந்து நாளை விடுவிக்கப்படும் வைத்திய நிபுணர் அதன் பின்பு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் பின் அங்குள்ள வைத்திய நிபுணர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விடுவிக்கப்படுவார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உணர்வழியல் வைத்திய நிபுணர் எங்களுக்கு விடுவிக்கப்படுவார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது ஒரேயொரு உணர்வழியல் வைத்திய நிபுணரே கடமையாற்றி வருகின்றார்.

எனவே, வட மாகாணத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்து மிகப் பெரிய வைத்தியசாலையாகவும் 36 வைத்திய நிபுணர்கள் கொண்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அரும் பெரும் சேவையாற்றி வருகிறது.

எங்கள் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுகள்,சத்திர சிகிச்சைகள் தொடர்ச்சியாக நடைபெற எங்களுக்கு மூன்று உணர்வழியியல் வைத்திய நிபுணர் வேண்டும்.

இது தொடர்பில் நாங்கள் எமது வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் ஊடாகவும், எமது வைத்தியர்கள் ஊடாகவும் கோரிக்கைகள் முன்வைத்திருந்த போதும் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளை, அடுத்த வாரங்களுக்குள் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாதவிடத்து தொடர்ச்சியான, பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதை மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.