இலங்கைக்கு அனுப்புமாறு கோரி திருச்சி சிறப்பு முகாமில் மேலும் ஒருவர் உண்ணாநிலை!!(படங்கள்)

569

இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்து திருச்சி சிறப்பு முகாமில் மேலும் ஒருவர் உண்ணாநிலை இருக்கின்றார்.

திருச்சி சிறப்பு முகாமில் உமா ரமணன் என்பவர் கடந்த 1ம் திகதி தொடக்கம் தன்னை குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்து உண்ணாநிலை இருந்து வருகின்றார்.

தமிழகத்தில் சிறப்பு முகாம் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமலேயே இலங்கையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு செல்வதற்கு முடிவெடுத்ததாக உமாரமணன் தெரிவித்துள்ளார்.

காலவரையரையற்ற தடுப்பு என்பதால் குடும்பங்கள் வாழ வழியின்றி தெருவுக்கு வருகின்ற நிலைமையும் அதனால் குடும்பங்கள் பிரிகின்ற நிலைமையும் தாங்கிக்கொள்ள முடியாத கொடுமைகளாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

உமாரமணனின் உண்ணாநிலை மூன்றாவது நாளாக தொடர்கின்ற நிலைமையில் மேலும் ஒருவர் இதே கோரிக்கையினை வலியுறுத்தி உண்ணாநிலையை இன்று ஆரம்பித்துள்ளார்.

நந்தகுமார் இராசதுரை (32) என்பவரே நேற்றைய தினம் உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி நந்தகுமார் சுமார் 12 வருடங்களாக அபுதாபியில் தொழில் புரிந்து விட்டு முறையான ஆவணங்களுடன் கடவுச்சீட்டு மூலம் தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில் வழமையான நடைமுறைகளின் படி காவல்துறை பதிவுக்குட்படுத்தி வசித்து வந்துள்ளார்.

இவர் ஆவணங்கள் எல்லாம் வைத்திருந்த போதும் ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தை கூறி பொய்யான வழக்கில் கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த ஆறு மாதங்களாக எதுவித முடிவுமின்றி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையால் தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்புமாறு கோரியே இவர் உண்ணாநிலை இருக்கின்றார்.

தங்களை விரைந்து இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உமாரமணனும், நந்தகுமாரும் இலங்கை தூதரகத்திற்கும் துணைத் தூதரகத்திற்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளதாகவும் மேலும் அறியமுடிகின்றது.

T1 T2 T3