யாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்!!

1904


யாழ். பல்கலைக்கழகத்தில்..


யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பொது மக்கள் கூடுவதாகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுவதாகவும் தெரியவருகின்றது.இதனை உறுதிப்படுத்துவதற்கு யாழ். துணைவேந்தரின் ஊடகப்பிரிவு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்ட போது யாரும் பதில் அளிக்கவில்லை.


முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.


யாழ். பல்கலை நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை இடை நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும் பல்கலை மாணியங்கள் ஆணைக்குழுவும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்கலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை வளாகத்தில் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதானாலும் துணைவேந்தரின் ஒப்புதல் மிக முக்கியமானதாக இருக்கின்றது.

அதாவது ஒரு கட்டிடம் புதிதாக நிர்மாணிப்பதாக இருந்தாலும் சரி ஒரு கட்டிடத்தை அகற்றுவதானாலும் சரி உப வேந்தரின் அனுமதி மிக பிரதானம். எனினும், இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவரவில்லை.

-தமிழ்வின்-