13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் இரும்புப் பெண்!!

467

Irom_Chanu_Sharmila

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் கடந்த 2-11-2000 அன்று புகுந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டு கொன்றனர்.

இந்த அநியாய பலிக்கு காரணமான மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சானு ஷர்மிளா என்ற இளம்பெண் 4-11-2000 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

தனது 28வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 13 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை இவர் ஈர்த்து வருகிறார்.

தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை கைது செய்த மணிப்பூர் மாநில பொலிஸார் விசாரணைக் காவலின் கீழ் இம்பாலில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு வைத்தியசாலையில் அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மூக்கின் வழியாக திரவ உணவுகளை செலுத்தி வருவதால் கடந்த 13 ஆண்டுகளாக அவர் உயிர் வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் உரிமை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பலரது கோரிக்கையை ஏற்க ஷர்மிளா மறுத்துவிட்டார்.

மனித உரிமை போராளிகளுக்கான குவாஞ்சு விருது, மயிலம்மா விருது, 51 லட்சம் ரூபாய் பரிசுடன் கூடிய ரவீந்திரநாத் தாகூர் விருது உள்ளிட்ட பல விருதுகள் ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தனது கோரிக்கையை ஏற்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நீக்கும்வரை எந்த விருதையும் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் ஷர்மிளா உறுதியாக உள்ளார்.

இம்பால் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த தற்கொலை முயற்சி வழக்கில், இரோம் ஷர்மிளாவை கடந்த ஆண்டு விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை பெற்ற இரோம் ஷர்மிளா, நேராக ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஷர்மிளா கம்பா லுப் ஷங்க்ளேன் என்ற அவரது அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவருடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால், மணிப்பூர் பொலிஸார் மீண்டும் கைது செய்து நேரு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தற்கொலை முயற்சிக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால், மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்ற கொள்கை உறுதியுடன் கடந்த 13 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டுவதும், ஓராண்டுக்கு பின்னர் விடுதலை செய்யப்படுவதுமாய் மனித உரிமையை பாதுகாக்கப் போராடும் இரோம் ஷர்மிளாவின் பிறந்த நாளான மார்ச் மாதம் 14ம் திகதி ஒவ்வொரு ஆண்டும் வைத்தியசாலையில் கழிந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு எதிராக போராடியவர்களை எல்லாம் வலை விரித்து பிடித்து பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வரும் ஆம் ஆத்மி கட்சியினர் இவருக்கு உள்ள செல்வாக்கை ஓட்டுகளாக்க விரும்பி சமீபத்தில் அவரை சந்தித்து முயற்சி செய்தபோது அந்த அழைப்பை மறுத்து விட்ட இரோம் ஷர்மிளா, ஒரு குடிமகனின் குரல் எடுபடாத நாட்டில், அரசியல்வாதியின் குரல் மட்டும் எடுபடுமா என்ன..

நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட அகிம்சை வழியை தேர்ந்தெடுத்த மகாத்மா காந்தி அரசியல் கட்சியில் சேர்ந்தா தனது போராட்டத்தை ஆரம்பித்தார் என்று கூறுகிறார்.

39வது உலக மகளிர் தினத்தையொட்டி இரும்பு மங்கையான இரோம் ஷர்மிளாவை கௌரவிக்கும் வகையில் வரும் 8ம் திகதி பாராட்டு விழா நடத்த அசாம் மற்றும் மணிப்பூர் மாநில மகளிர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.