வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 3 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு செல்ல மறுத்த வைத்தியர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!!

8271

கொரோனா தொற்று..

வவுனியா நகரில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றினை நடாத்தி வருகின்ற வைத்தியர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அவரை கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதிலும் குறித்த வைத்தியர் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருப்பதாக வைத்தியசாலைக்கு செல்ல மறுத்து வந்துள்ளார்.

இந் நிலையில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மூன்று தினங்களின் பின்னர் இன்று (14.01) மதியம் கடும் முயற்சியினால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சாதாரண பொதுமகன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்காத சமயத்தில் அவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லுகின்ற போதிலும்,

குறித்த வைத்திருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மூன்று நாட்களாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தாமதித்தது ஏன்? அவர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் சுகாதாரப் பிரிவினர் சாதாரண மக்களுக்கு ஒர் சட்டத்தையும் செல்வாக்கானவர்களுக்கு ஒர் சட்டத்தினையும் அமுல்படுத்துவது கவலைக்குறிய விடயமாகும். குறித்த வைத்தியரின் குடும்பத்தினர் தொடர்ந்து அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.